அணுகுண்டு சோதனை நடத்தலாம்: கலாம்
>> Sep 8, 2008
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது' என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
அணுவர்த்தகத்தில் ஈடுபடுவதில் இந்தியாவுக்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி முன்மொழியப்பட்ட தீர்மான வரைவுக்கு, அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் குழு (என்.எஸ்.ஜி.) ஒப்புதல் அளித்தது.
இதன்மூலம், இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியுள்ளன.
ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இனி இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தும் உரிமையை இழந்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அணு எரிபொருள் வழங்கும் நாடுகள் சலுகை வழங்கியிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும்.
நமது தேவையைக் கருத்தில் கொண்டு, அணுகுண்டு சோதனை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தாராளமாக நாம் நடத்தலாம். எந்த ஒப்பந்தமும் இதனை தடுக்காது. இந்திய -அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் இதுபற்றி குறிப்பிடப்படவில்லை.
நாம் அணுகுண்டு சோதனை நடத்தினால், இரண்டு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்று, இந்த ஒப்பந்தம் ரத்தாகும். அல்லது நாட்டு நலன் கருதியே சோதனை நடத்தியாக நாம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால், அது ஓர் பிரச்னையாகவே கருதப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment